Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல--கெஹலிய ரம்புக்வெல.


தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இலங்கையை தாக்கினால் முற்றாக இல்லாதொழிப்போம்.

இப்படிக் கூறியுள்ளார் மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

"
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றாத காரணத்தாலேயே நாட்டு மக்கள் அந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது" என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த நோய் நாட்டைப் பார்த்தோ அல்லது இனத்தைப் பார்த்தோ அல்லது மொழியைப் பார்த்தோ அல்லது அரசைப் பார்த்தோ வருவதில்லை.

இந்த வைரஸ் நோய் உலகெங்கும் பரவி வருகின்றது. இலங்கைப் பிரஜை ஒருவர் மட்டுமே இங்கு கொரோனா நோயால் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏனையவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு தலைமையிலான சுகாதாரக் குழுவினர் எடுத்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனைகளை அரசு உரிய முறையில் பின்பற்றிய காரணத்தால் தான் கொரோனா வைரஸ் இங்கு ஆட்கொள்ளவில்லை

தற்போது இங்கு ஒருவர் மட்டுமே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் விரைவில் சுகமடைவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது

ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சீனப் பெண்ணைக் குணமாக்கி அவரை நாம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

எனவே, இந்த வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லை” – என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை