Breaking News

கொரோனா வைரஸ் -உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.


உலகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. இதில் இத்தாலியும், ஈரானும்தான் மிக மோசமாக பாதித்து உள்ளது.
கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.
சீனாவில் தற்போது வரை 80881 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் 3,226 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அங்கு 13 பேர் மட்டும் இந்த வைரசால் பலியானார்கள்.
சீனா மிக கடுமையான சட்டங்கள் மூலம் இந்த வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது. பல்வேறு நகரங்களை மொத்தமாக மூடி அங்கு மக்களை ஒடுக்கி இந்த வைரஸை அரசு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறது.
அதேபோல் அங்கு நிறைய இடங்களை மருத்துவமனைகளாக மாற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அங்கு வைரஸ் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸால் இத்தாலியில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மிக குறைவாக இருக்கிறது.
அதேபோல் தொழில்நுட்ப கருவிகளும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்கு உள்ளேயே பலர் பலியாகும் நிலை இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடலை கூட அரசு வந்து அங்கு எடுக்கவில்லை என்று புகார் உள்ளது.
கொரோனா காரணமாக இத்தாலியில் 27,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,158 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதித்த சீனாவிலேயே 3200 பேர்தான் பலியானார்கள்.
ஆனால் இத்தாலியில் 30000 பேர் கூட பாதிக்கப்படவில்லை. ஆனால் அங்கு 2158 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் கொரோனா இறப்பு சதவிகிதம் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு அரசு தங்களை கைவிட்டுவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இன்னொரு பக்கம் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 14,991 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 853 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.
அதே சமயம் ஈரான் இந்த மரணங்களை மறைத்து வருகிறது. அங்கு 2500க்கும் அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. ஈரான் அதை மறைக்கிறது. அங்கு பல உடல்கள் புதைக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.
பல உடல்கள் கருப்பு பைகளில் குவிக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. அதே போல் இன்னொரு பக்கம் தென் கொரியாவில் 8,320 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தென் கொரியாவில் சர்ச் மூலம்தான் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் ஸ்பெயினில் வேகமாக கொரோனா பரவி வருகிறது.
அங்கு 9,942 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அமெரிக்காவில் 4,743 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 93 பேர் பலியாகி உள்ளனர்.
ஜெர்மனியில் 7718 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 17 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 6,633 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 148 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்தான் இதை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை