Breaking News

மிக கொடூரமான ஒரு கட்டத்தை நெருங்கி வருகிறோம் - அமெரிக்க ஜனாதிபதி கவலை!


கொரோனா வைரஸால் அடுத்த வாரமளவில் அமெரிக்கா அதிகளவு உயிரிழப்புக்களை சந்திக்கப்போகிறது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று நியூயோர்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசியபோது அவா் இவ்வாறு கூறினார்.
பல மாகாணங்களில் நோயாளா் தொகை அதிகரித்துள்ள நிலையில் உயா்காப்பு ஆதாரமாக உள்ள வென்டிலேட்டர்களைப் பெறுவதற்கு மத்திய அரசு போதுமான ஏற்பாடு செய்யவில்லை என்ற விமர்சனங்களை ட்ரம்ப் நிராகரித்தார்.
சில மாகாண ஆளுநர்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமான வென்டிலேட்டர்களைக் கேட்கிறார்கள் என்று அவா் கூறினார்.
கொரோனா வைரஸால் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 306,000 க்கும் அதிகமானோர் அங்கு கொருானா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனா். 8,300 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
100,000 முதல் 240,000 அமெரிக்கர்கள் வரை இந்த தொற்றுநோயால் கொல்லப்படலாம் என்று வெள்ளை மாளிகையின் மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் "நாங்கள் மிக கொடூரமான ஒரு கட்டத்தை நெருங்கி வருகிறோம்என வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களிடம் பேசிய ட்ரம்ப் கூறினார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 630 போ் நியூயோர்கில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்ததாக மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்தார்.
நியூயோர்க்கில் 3,565 பேர் இதுவரை உயிரழந்துள்ளனா். குறிப்பாக நியூயோர்க் நகரத்தின் கிழக்கே உள்ள லோங் தீவில் நிலைமை கவலை அளிக்கிறது.
அங்கு கொரோணா தொற்று எண்ணிக்கை தீயைப் போல மிக வேகமாகப் பரவி வருகிறது என ஆளுநா் கியூமோ செய்தியாளா்களிடம் கூறினார்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி அமெரிக்காவில் பதிவான கொரோனா வைரஸ் இறப்புகளில் கால் பகுதிக்கும் மேலானவை நியூயோர்க் நகரத்தில் மட்டும் பதிவாகியள்ளமை உறுதியாகியுள்ளது.
நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் நோயாளா்களைச் சமாளிக்க முடியாது திணறி வருகின்றன.
இறந்தவா்களை அடங்கம் செய்யவும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுகிறது.
ஆபத்தான கொரொனா தொற்றுக்குள்ளான தங்கள் அன்புக்குரியவா்களை பார்க்கக்கூட முடியாது மக்கள் திண்டாடுகின்றனா். அவா்களின் இறுதி நேரத்தில் கூட அவா்களோடு இருக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
நியூயோர்க் -பிரஸ்பைடிரியன் மருத்துவமனையில் பணிபுரியும் சிலா் இந்த வாரம் முழுவதும் மரணமடைந்தவா்கள் தொடா்பில் அவா்களது குடும்பங்களுக்கு அறிவிப்பதிலேயே பரபரப்பாக உள்ளனா்.
தங்கள் அன்புக்குரியவர்களை இறுதி நேரத்தில் பார்க்க முடியாது ஒவா்களின் இறப்பு செய்தியை மட்டுமே கேள்விப்படுவதில் உள்ள வலி கொடூரமானது என ஆளுநா் கியூமோ கூறினார்.
அமெரிக்க அரசாங்கத்திடம் உள்ள மருத்துவ உபகரணங்களின் இருப்பு கிட்டத்தட்ட தீா்ந்துவி்ட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பாதுகாப்பு அங்கிகள் கூட தீா்ந்து வருகின்றன.
அவசரமாக 1000 வெண்டிலேட்டா்களை சீனா நன்கொடையாக வழங்குகிறது. "இது ஒரு பெரிய விடயம், இது எங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று கியூமோ கூறினார்.
ஜனாதிபதி டொனால்ட் டட்ரம்ப் மற்றும் சீன ஜனாதபதி ஜி ஜின்பிங் இடையே மார்ச் 27 அன்று நடந்த உரையாடலின்போது அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கேற்ப வென்டிலேட்டர்களை சீனா அனுப்பியுள்ளது என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துகள் இல்லை